விருத்தாசலம், நவ. 18: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அஜித் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் அபிஷேக் (25). அபிஷேக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (36) என்பவரை தனது நண்பர் என்று அறிமுகப்படுத்தி அவருக்கு அவசரத் தேவையாக ரூ.ஐந்தாயிரம் பணம் தேவைப்படுகிறது. அதனால் அருண்குமாருடைய மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பணம் கொடுக்கும் படி அஜித்திடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அஜித் ரூ.4 ஆயிரத்து 500 பணம் கொடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு ஆர்சி புக்கினை கேட்டுள்ளார்.
செல்போனில் படம் எடுத்து அனுப்புவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றவர்கள், மீண்டும் மற்றொரு மோட்டார் சைக்கிளை அஜித்திடம் கொடுத்து இதனையும் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அஜித் அது திருட்டு வாகனமாக இருக்குமோ என எண்ணி மோட்டார் சைக்கிள்களையும் அருண்குமார், அபிஷேக் ஆகிய இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது அது திருடி வந்து விற்க முயன்ற மோட்டார் சைக்கிள் என்பது உறுதியானது. அதனை தொடர்ந்து அருண்குமார், அபிஷேக் ஆகிய இருவர மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து, மோட்டார் சைக்கிள்கள் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


