திருவெண்ணெய்நல்லூர், செப். 17: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த ஆண் சடலத்தை ஏற்றிக்கொண்டு நேற்று தூத்துக்குடி மாவட்டம் கூழாமூர் கிராமத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சத்துணவு முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி சென்ற லாரி மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சில் வந்த தனம், தேன், கல்யாணசுந்தரம், தேவேந்திரன், மாணிக்கம், கண்டாச்சிபுரம் அடுத்த பரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சென்னையில் இருந்து வந்த சடலத்தை மீட்டு வேறு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தினால் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement