கள்ளக்குறிச்சி, செப். 16: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனிப்பிரிவு காவலரை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்பு அந்த பெட்டிக்கடையின் உரிமையாளரை கரியாலூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெட்டி கடைக்கு கரியாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் பிரபு (40) என்பவர் கடந்த வாரம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அந்த பெட்டிக்கடையின் உரிமையாளரின் மகள் 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த மாணவி சுதாரித்துக்கொண்டு உடனே போலீஸ் பிரபுவை கீழே தள்ளிவிட்டு அழுததாக தெரிகிறது. இதையடுத்து காவலர் பிரபு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் மாணவியிடம் அவரது தாய் கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி உமாவிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் முறையிட்டு புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விரைந்து விசாரணை நடத்தி துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி. மாதவனுக்கு டிஐஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி. திருமால் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல், கள்ளக்குறிச்சி மகளிர் காவல் ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் கரியாலூர் தனிப்பிரிவு காவலர் பிரபுவை கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், தனிப்பிரிவு காவலர் பிரபு மீது போக்சோ மற்றும் வன்கொடுமை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதைபோல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் சிக்கி கைது செய்யப்பட்ட விவகாரம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரியாலூர் காவலர் அரை நிர்வாணத்துடன் ஆபாசமாக பேசும் வீடியோ வைரல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த பிரபு, 17 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் போக்சோ வழக்கில் பிரபு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் யுவராஜ் என்பவர் கரியாலூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் அரை நிர்வாணத்துடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்மந்தமாக காவலர் யுவராஜ் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு எஸ்.பி. மாதவன் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். கரியாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதால் கள்ளக்குறிச்சி காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு துப்பாக்கிக்கு ரூ.90,000 பேரம்
கரியாலூரில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு நாட்டு துப்பாக்கிகள் ஒரு வீட்டில் இருப்பதாக ரகசிய தகவல் தனிப்பிரிவு போலீஸ் பிரபுவுக்கு வந்துள்ளது. உடனே உஷரான பிரபு, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் தனி நபராக அங்கு சென்று சோதனை செய்துள்ளார். அப்போது 3 நாட்டு துப்பாக்கிகள் கிடைத்துள்ளது. இதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் தனது வீட்டுக்கு எடுத்துவந்து அந்த நபரிடம் பேரம் பேசியுள்ளார். வழக்கு பதியாமல் இருக்க அந்த நபரிடம் ரூ.90 ஆயிரம் பணத்தையும் வாங்கி உள்ளார். போலீஸ்காரர் பிரபுவிடம் ஒரு துப்பாக்கியாவது ெகாடுங்க என அந்த நபர் கேட்டதற்கு 3 மாதம் ஜெயிலா, துப்பாக்கியா என கேட்டு மிரட்டி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோ காவலருக்கு மகாத்மா காந்தி விருது பரிந்துரை
போக்சோ வழக்கில் சிக்கிய காவலர் பிரபுவுக்கு தமிழக அரசின் மகாத்மா காந்தி விருது வழங்குவதற்காக கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்பி ரஜத் சதுர்வேதி ஏற்கனவே பரிந்துரைத்திருந்தார். காவல்துறையில் அவரது சிறப்பான பணி சேவையை பாராட்டி இவ்விருதானது வருகிற அக்.2ம்தேதி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது போக்சோ வழக்கில் பிரபு கைது செய்யப்பட்டு இருப்பதால் விருது பெறுவதற்கான தகுதியை அவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.