புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மில் ரயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் ரூ.72 கோடியில் இருவழி சாலை ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி பூமிபூஜை செய்து பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ஆனால், ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்ததால், உடனடியாக பணிகள் துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே மாதம் புதுச்சேரி பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பின்னர், புதுச்சேரி-கடலூர் சாலையில் ஏஎப்டி மில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி தொடங்கியது.இந்நிலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, புதுச்சேரி- கடலூர் சாலையில் முழுமையாக வாகனங்களை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்து இருப்பதாக கிழக்கு போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் சிங்காரவேலர் சிலை அருகே ரோடியர் மில் செல்லும் சாலையின் இரு வழியிலும் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்து அடைத்தனர். மேலும், புதுச்சேரி நீதிமன்றத்துக்கு செல்ல ஒருவழியில் மட்டும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.