உளுந்தூர்பேட்டை, செப். 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புது தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் ஆகாஷ் (20) என்பவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு துபாயில் கடந்த எட்டு மாத காலமாக வேலை செய்து வந்துள்ளார். இரண்டு மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் மீண்டும் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி மீண்டும் வெளிநாடு செல்வதற்காக அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஏர்போர்ட்டுக்கு தனது தாய் நதியா (38), அண்ணன் கார்த்திக் உடன் செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி தனது அக்காவிடம் சொல்லிவிட்டு வருவதாக கூறிச் சென்ற ஆகாஷ் களைக்கொல்லி மருந்து குடித்ததாக தெரிகிறது. இதை பெற்றோரிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி சென்னை சென்றபோது தாம்பரத்தில் மயக்கம் ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாக ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக பதற்றம் அடைந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.