கடலூர், அக். 14: கடலூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.22.94 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில் போலீசார், மஞ்சக்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி (29), புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (44) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராமன் மீது 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்குகளும் உள்ளன. பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement