தீபாவளியை முன்னிட்டு வியாழன் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
கடலூர், அக். 14: கடலூரில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி திருநாள் முடிவடைந்து, அதன் பிறகு 3 நாட்கள் அவரவர்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி இடங்களுக்கு செல்வதற்கும் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு போல தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்து 2,900 பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுகிறது. வரும் வியாழன் முதல் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 800 முதல் 1,500 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
அதேபோல தீபாவளி முடிந்த பிறகு சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருபவர்கள் அல்லது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கும் கூடுதல் பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வாரம் கூட பெங்களூருக்கு சென்று சொகுசு பேருந்துகளை ஆய்வு செய்துள்ளோம். டிசம்பர் மாதத்திற்குள் சொகுசு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் பணிகளை துவங்கி வைக்க உள்ளார். பல்வேறு மாநிலங்களில் சொகுசு பேருந்துகள் வாங்கி உள்ளனர். அதேபோல் தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது சொகுசு பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 11 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டு கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பேர் பணிக்கு எடுத்துள்ளோம். இப்போது 8 போக்குவரத்திற்கும் சேர்த்து 3200 பேர் பணிக்கு எடுப்பதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது, என்றார். மாநகர திமுக செயலாளர் ராஜா, பொதுக்குழு பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்
அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை ஆணையர், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்த உள்ளனர். இருப்பினும் தனிப்பட்ட முறையில் நானும் அவர்களுடன் பேசி வருகிறேன். அவர்கள் கடந்த 2, 3 ஆண்டுகளாக கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இயக்குவது போலவே ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் கடந்த 2 நாட்களாக 10 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து சங்கத்தில் இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாவது, அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கின்ற பணிகளில் ஈடுபட்டால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். இதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது, என்றார்.