கடலூர், அக். 14: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேவநாதசுவாமி கோயிலில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிலும் புரட்டாசி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு வகைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பல்வேறு விசேஷங்கள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலர் வெங்கட கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கோயில் வளாகத்தில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை தொடர்பாக உண்டியல் எண்ணிக்கை பணியை மேற்கொண்டனர் .இதில் ரூ.43 லட்சத்து 380 ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 160 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி அடங்கும்.
+
Advertisement