புதுச்சேரி, அக். 13: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒதியம்பேட் மெயின் ரோடு, கணுவாபேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு மணவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (62) என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து தெரியவந்தது.
மேலும், விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் கலப்படம் செய்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, சுப்பிரமணி மீது போலீசார் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர். மேலும், அவரது கடையில் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், உருளையன்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் பார் அருகே பொறையூரை சேர்ந்த தயாளன் (54) என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.39 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.