திருக்கோவிலூர், அக். 13: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மகன் எத்திராஜன்(15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை எத்திராஜன் தனது நண்பர்களுடன் திருவரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர். சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக எத்திராஜன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலூர் அடுத்த ஆவியூர் கிராமத்தில் உள்ள பெண்ணை ஆற்றின் ஓரத்தில் சடலம் ஒன்று ஒதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர், போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட எத்திராஜன் என தெரியவந்தது. இதையடுத்து எத்திராஜன் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.