புதுச்சேரி, நவ. 12:புதுவையில் மருந்து ஊழல் வழக்கில் கைதான முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் உள்பட 5 பேரை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். புதுச்சேரி சுகாதார துறை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விட்டமின் சத்து மாத்திரை வழங்க கடந்த 2019ம் ஆண்டு சுகாதார துறை சார்பில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை அங்கு பணிபுரியும் தேசிய ஊரக சுகாதார இயக்க (என்ஆர்எச்எம்) மருந்தாளுநர் நடராஜன் போலி மருந்து கம்பெனி மூலம் எடுத்தார்.
இதற்கு உடந்தையாக அப்போதைய சுகாதார துறை இயக்குநர் கே.வி.ராமன், கண்காணிப்பாளரும், ஓய்வு பெற்ற சுகாதார துறை இயக்குநருமான மோகன்குமார், முன்னாள் இணை இயக்குநர் அல்லிராணி ஆகியோர் இருந்தனர். இதையடுத்து நடராஜன் டெண்டரை பெற்று காலாவதியான மருந்துகளை கொள்முதல் செய்து ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கர்ப்பிணிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார். இந்த மருந்துகளை உட்கொண்ட கர்ப்பிணிகள், மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்ஆர்எச்எம் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மருந்து முறைகேடு வழக்கு தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சீனியர் எஸ்பி ஈஷாசிங், எஸ்பி நல்லாம் கிருஷ்ணராயபாபு ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் தனிப்படை போலீசார் ஓய்வு பெற்ற சுகாதார துறை இயக்குநர்கள் ராமன் (68), மோகன்குமார் (66), முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி (67), மருந்து ஏஜென்சி உரிமையாளரும், மருந்தாளுநருமான புனிதா (34), மோகன் (54), நந்தகுமார் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பிறகு அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த புதுவை மாநில தலைமை நீதிபதி ஆனந்த் 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது அல்லிராணிக்கு ரத்த அழுத்தம் மற்றும் வீசிங் பிரச்னை இருந்ததால் அவருக்கு மட்டும் நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது. பிறகு மீதமுள்ள 5 பேரை காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் முன்னாள் இயக்குநர் மோகன்குமார் நோயாளிகளுக்கு ஆப்ரேஷன் செய்வதற்கு நேரம் கொடுத்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து ஆப்ரேஷன் செய்வதற்காக மட்டும் சென்று வர உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மீண்டும் அவர் வரும் 14ம் தேதி சிறையில் அடைக்கப்படுவார்.
இதனிடையே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 நபர்களுக்கும் நீதிமன்ற காவல் 15 நாட்கள் முடிந்ததையடுத்து அவர்களை நேற்று காலை நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர்களை மீண்டும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அல்லிராணிக்கு உடல்நிலையை காரணம் காட்டி வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் போலி மருந்து நிறுவனத்தின் நிர்வாகிகள் கணேஷ், ஜெயந்தி உள்ளிட்ட நான்கு நபர்கள் தங்களை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று இருந்தனர். அவர்களுக்கான தடை ஆணை முடிந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
