மரக்காணம், அக். 12: மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சியில் 3வது வார்டில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 10க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பினர். இதில் அய்யன் பெருமாள், செங்கேணி, சுந்தரம், குப்புசாமி, கிருஷ்ணவேணி, மண்ணாங்கட்டி, சரளா உள்பட 10க்கும் மேற்பட்டோர் மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு அப்பகுதியில் உள்ள குடிநீர் காரணமா? அல்லது அந்த தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் பகுதியில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்களை தாக்குகிறது. எனவே இவர்கள் பாதிப்புக்கான காரணம் எதுவாக இருக்கும் என தெரியவில்லை என கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.