கடலூர், அக். 12: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சமூகநீதி மாணவர் விடுதி மற்றும் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி ரூ.15.76 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் கூறுகையில், கடலூர் தேவனாம்பட்டினத்தில் மாநில நிதியின் கீழ் ரூ.9.75 கோடி மதிப்பீட்டில் 200 மாணவர்கள் தங்கும் வசதிகளுடன் கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறை, பொருட்கள் இருப்பறை, வார்டன் அறை உள்ளிட்ட 8 அறைகளும், 10 கழிப்பறை மற்றும் குளியறைகளும், முதல் தளத்தில் 14 தங்கும் அறைகள், 14 கழிப்பறை மற்றும் குளியறைகளும், இரண்டாம் தளத்தில் 12 தங்கும் அறைகள், 12 கழிப்பறை மற்றும் குளியறை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒரு அறையில் 6 மாணவர்கள் தங்கும் வசதி, போர்டிகோ, போதுமான காற்றோட்ட வசதி, மாணவர்கள் இணைய வழியில் கல்வி கற்றிட ஏதுவாக வைபை வசதிகளுடன் உள்ளது, என்றார். முன்னதாக, அமைச்சர்கள் சி.வெ.கணேசன், டாக்டர் எம்.மதிவேந்தன் ஆகியோர் திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.