கடலூர், செப். 12: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை பிரிவில் நல்லவாடு பகுதியை சேர்ந்த மீனவர் குப்புராஜ் மற்றும் தமிழரசி தம்பதிக்கு குழந்தைபேறு பார்க்கப்பட்டது. 7 மாத கர்ப்பிணியான தமிழரசி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் ஒரு கிலோ மற்றும் 1.1கிலோ எடையுடன் பிறந்தது. 28 வாரம் குறைமாதத்தில் பிறந்த இரட்டையர்களை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எடை குறைவான குழந்தைக்கு உடல் வெப்பம் குறைதல், சர்க்கரை அளவு குறைதல் போன்ற சிக்கல்களுக்கு செவிலியர்களும், மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். 80 நாட்கள் சென்ற நிலையில் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்ட நிலையில் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு மாற்றினர். குழந்தைக்கு தாய்ப்பால், கங்காரு மதர் கேர், இதர சத்து மருந்துகள் கொடுத்து தொடர்ந்து குழந்தையின் எடையை ஏற்றி உடல் நலத்தை பேணி காத்தனர். இரட்டைக் குழந்தைகள் 80 நாட்கள் முடிந்த நிலையில் நல்ல உடல் எடையும் (2kg) மூலை வளர்ச்சியும் வேறு எந்த குறைபாடும் இல்லாததால் டிஸ்சார்ஜ் செய்தனர். தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் பராமரிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பியது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.