விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தலைமறைவு வாலிபர் காவல் நிலையத்தில் சரண்
விருத்தாசலம், செப். 12: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கட்டிட தொழிலாளி கார்த்திக், வியாபாரிகள் சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோரை தாக்கிய போதை கும்பல் கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்திலும் ஏறி ஓட்டுனர் கணேசனை தாக்கி ரகளையில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த விருத்தாசலம் போலீசார், போதை கும்பலைச் சேர்ந்த பழமலை நாதர் நகர் கந்தவேல், சிவா என்ற விக்னேஷ், பாலாஜி உள்ளிட்டோரை பிடிக்க அங்குள்ள முந்திரி காட்டுக்கு சென்றனர். அப்போது ஏட்டுகள் வீரமணி, வேல்முருகன் உள்ளிட்டோரை அரிவாளால் தாக்கி தப்பிஓட முயன்ற கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் கந்தவேல், சிவாவுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே போதை கும்பல் ரகளை சம்பவத்தை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்குதல் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார், போதை கும்பலைச் சேர்ந்த 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, தலைமறைவான பாலாஜியை தொடர்ந்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கந்தவேலை போலீசார் சுட்டு பிடித்ததால் பதுங்கியிருந்த பாலாஜி, எங்கே தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயத்தில் நேற்று ஒரு வீடியோவை பதிவுசெய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாலாஜியை வலைவீசி தேடி வந்த நிலையில் எங்கே தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயந்து, தானாகவே விருத்தாசலம் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.