விருத்தாசலத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் செராமிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
விருத்தாசலம், டிச. 11: விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு எம்ஆர்கே நகரை சேர்ந்தவர் மார்ட்டின் மகன் விக்டர் ஜோசப் (42). இவர் அதே பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த தொழிற்சாலைக்கு பின்புறமாக அகல் விளக்குகள், பழைய ஆயில் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்காக குடோன் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்த குடோன் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தீ மளமளவென எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு முன்னணி தீயணைப்பு வீரர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.
இதில் அகல் விளக்குகள் மற்றும், அதனை பார்சல் செய்யும் பாக்கெட்டுகள், பேப்பர் கவர்கள், இயந்திரங்கள், அகல் விளக்கு தயாரிக்கப்படும் ஆயில் உள்ளிட்ட மூலப் பொருட்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா அல்லது யாரேனும் தீவைத்தனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து ஒரே புகை மூட்டமாக காட்சியளித்த நிலையில் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் தீ விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.


