Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ஆய்வு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய ஒலி எழுப்பான்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, செப். 11: உளுந்தூர்பேட்டை டோல்கே0ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார். புதிய நவீன கருவி மூலம் வாகனங்களை ஒலி அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன் வைக்கக்கூடாது என்பது தெரியாதா? சோதனையில் 108 ஆக காண்பித்தது. 90 தான் இருக்க வேண்டும். அதிகமாக உள்ளதால் அபராதத்ைத அதிகாரிகள் விதிப்பார்கள். எனவே உங்கள்(டிரைவர்) ஓனரிடம் கூறிவிடுங்கள், என்றார். தொடர்ந்து லாரியை ஆய்வு செய்தபோது 117 ஆகவும் மற்றொரு ஆம்னி பேருந்து 106 ஆகவும் காண்பித்தது. வாகனங்களில் இருந்த ஒலி எழுப்பான்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த பரிசோதனையில் நவீன கருவி மூலம் வாகனங்களின் ஒலி அளவீடு செய்யப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கு இணங்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய அளவீடு கண்டறியும் கருவி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் ஒலி அளவு 90 என்பதை 100க்கு மேல் இருந்தால் அந்த ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் 250 கருவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பியும், காற்று மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டால் அந்த ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே அதிக ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், தற்போது உரிய நவீன கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு அது அகற்றப்பட உள்ளது. தொடர்ந்து இந்த அளவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என்றார். உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்எல்ஏ, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உளுந்தூர்பேட்டை நெடுஞ்செழியபாண்டியன், விழுப்புரம் அருணாசலம், திண்டிவனம் சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகவேல், முருகேசன், மூக்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.