திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்பி அதிரடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி, அக். 10: திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பொய்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (எ) சிவக்குமார் (52). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கடந்த மாதம் 8 ம்தேதி போக்சோ சட்டத்தில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து இவர் இதுபோன்று குற்றசெயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும், குற்றவாளி பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்பி மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்துக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையேற்று சிவக்குமாரை ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.