ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து அபகரிப்பு தாசில்தார், விஏஓவை கண்டித்து முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
விழுப்புரம், டிச. 9: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலி ஆவணம் மூலம் சொத்து அபகரித்தவர் மீதும், உடந்தையாக இருந்த தாசில்தார், விஏஓவை கண்டித்தும் முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்குள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்ெகாலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மழவந்தாங்கலை சேர்ந்தவர் சேகர் (65), விவசாயி.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள 60 சென்ட் இடத்தை எனது உறவினர் ஒருவர் பெயரில் போலியான ஆவணம் மூலம் பட்டா மாற்றம் செய்து விட்டார். இதனை அறிந்து செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், வருவாய் ஆய்வாளர், விஏஓ அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். அவர்கள் உடந்தையுடன்தான் எனக்கு சொந்தமான இடத்தை பட்டா மாற்றம் செய்துள்ளனர். எனது பெயருக்கு மாற்றக்கோரி தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மனவிரக்தியில் தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். தொடர்ந்து போலீசார் இதுபோன்று முயற்சியில் ஈடுபடக்கூடாது ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மீண்டும் ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு சென்றார்.


