விருத்தாசலம், அக். 9: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து குப்பநத்தம் நல்லூர் கிராமம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.
பேருந்தை கன்னியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி சென்றார். மணலூரைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பேருந்து குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது குப்பநத்தம் அசோக் (24), அமீர் பாஷா (24), அப்பு என்ற விஜய் ஆகிய மூன்று பேர், மது போதையில் பஸ்சை வழிமறித்து ஏன் பஸ் காலதாமதமாக வருகிறது என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அமீர் பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.