திண்டிவனம், செப். 9: திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் மத்திய நுண்ணறிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், செங்கல்பட்டு திருமணி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சாரதி (27), அதே பகுதியை சேர்ந்த பாபு மகன் பிரவீன் (28), ராய் மகன் ராபின் (27) என்பதும், இவர்கள் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கொண்டு செங்கல்பட்டு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
+
Advertisement