கடலூர், செப். 9: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி, மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து செல்கின்றனர். இதற்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மனு அளிக்க வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தபோது, அவரது பையில் சிறிய பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விருத்தாசலம் கஸ்பா தெருவை சேர்ந்த நடேசன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதித்து மனு அளித்தார். அதில், எனது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். எனவே எனது இடத்தை நான்கு பக்கமும் அளந்து அத்து காட்ட வேண்டும். மேலும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறியிருந்தார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.