ஆத்தூர், ஆக. 9: நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தண்ணீரை தெளித்து நகையை கொள்ளையடித்து தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (61). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செண்பகலட்சுமி (55). இவர்கள் இருவரும் நகைக் கடையை கவனித்து வருகின்றனர். பெண் ஒருவரும் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் 2 பேர் டூவீலரில் வந்தனர். கடையை பூட்டும் நேரத்தில் அவர்கள் வந்தனர். ஒரு பவுன், 2 பவுன், 3 பவுன் அளவில் சங்கிலி வேண்டும் என கேட்டனர். இதையடுத்து வைத்தீஸ்வரன் நகையை எடுத்து காண்பித்தார். ஆனால் அவர்களின் நடவடிக்கையை கவனித்த மனைவி செண்பகலட்சுமி, நேரம் ஆகி விட்டது கடையை பூட்டிவிடுவோம் என தெலுங்கில் கணவரிடம் தெரிவித்தார்.
அந்நேரத்தில் திடீரென அங்கு வைத்திருந்த நகையை எடுத்து கொண்ட 2 பேரும், மிளகாய் பொடியை தண்ணீரில் ஊற்றி வைத்திருந்த பாட்டிலை எடுத்து நகை கடை உரிமையாளர்கள் முகத்தில் ெதளித்தனர். பிளக்ஸ் பேனரில் ஒட்டக்கூடிய பசையை தண்ணீரில் கலந்தும் தெளித்தனர். என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்குள் 2 பேரும் நகையுடன் ஓடத்ெதாடங்கினர். அதில் ஒருவரை வைத்தீஸ்வரன் பிடித்துக்கொண்டார். நகையுடன் ஓடிய ஒருவரை அங்கிருந்த மக்கள் விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் வாய்பேச முடியாதவர் போல மயங்கினார். தகவலறிந்து ஆத்தூர் போலீசார் வந்து விசாரித்தனர். இதில், அவர்கள் ஆத்தூர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (47), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நாககுப்பத்தை சேர்ந்த சாமிதுரை (48) என்பது தெரியவந்தது. இதில் சாமிதுரையிடம் இருந்து கைத் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் புதிய தகவல்கள் ெவளியானது. சின்னசேலம் நாககுப்பத்தை சேர்ந்த சாமிதுரை, சிறுவாச்சூர் பகுதியில் ஏர்கலப்பை, அரிவாள் தயாரிக்கும் ெகால்லன்பட்டறை வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவாச்சூர் வந்தபோது, மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாமிதுரை யூடியூப் பார்த்துள்ளார். அதில் நகைக்கடையில் வேலை செய்வோரின் எண்ணத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் விவகாரத்தை தெரிந்துகொண்டு மூர்த்தியிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். எந்த நகைக்கடையில் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்? என்ற விவரத்தை நோட்டமிட்டனர். அதன்படி வைத்தீஸ்வரன் கடையை தேர்வு செய்து உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் சாமிதுரையிடம் துப்பாக்கி எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லன்பட்டறை வைத்துள்ளனர். கிராம பகுதிகளில் வேட்டைக்கு கொண்டு செல்லும் துப்பாக்கி பழுதானால் அதனை சரி செய்து கொடுத்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது சித்தப்பா இறந்துபோனார். அவரது வீட்டு கூரையில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்ெகாண்டதாக அவர் கூறினார். அந்த துப்பாக்கி 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தப்பா வைத்திருந்ததாக போலீசாரிடம் கூறினார். அந்த துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்தது. கொள்ளையடிக்க வருவதற்கு முன்பாக இருவரும் மதுகுடித்துள்ளனர். ேமலும் நகை கடைக்கு டிப்டாப்பாக சென்றால் தான் சந்தேகப்பட மாட்டார்கள் என நினைத்து புதிய சட்டையை வாங்கி போட்டுக்ெகாண்டு கொள்ளைக்கு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனிப்படை போலீசார் சாமிதுரை வீட்டில் வேறு துப்பாக்கிகள் ஏதாவது இருக்கிறதா? இதுபோன்ற கொள்ளையில் இதற்கு முன்பு ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் கைதான மூர்த்தி, சாமிதுரை ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.