திண்டிவனம், ஆக.9: திண்டிவனம் அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கி நேற்று காலை 6 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் செஞ்சியிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திண்டிவனம் அடுத்த கொள்ளார் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காருக்கு பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கார் மீது பலமாக மோதி அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த குரோம்பேட்டையை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி வளர்மதி(61) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேலும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரின் மகன் கண்ணன்(43) பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரோசனை காவல் நிலைய போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த ஓட்டுனர் கண்ணன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் திண்டிவனம் திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.