Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடலூரில் ரூ.1 கோடி கேட்டு நண்பனின் தந்தையை திட்டம் போட்டு கடத்திய வாலிபர்

கடலூர், அக். 8: கடலூரில் ரூ.1 கோடி கேட்டு நண்பனின் தந்தையையே வாலிபர் கடத்திய பகீர் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரன் தெருவை சேர்ந்தவர் பூவராகவன் (62). தனியார் நிறுவனத்தில் கணக்காளரான இவர், சம்பவத்தன்று தனது பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மொளசூர் என்ற இடத்தில் சென்றபோது, ஒரு காரில் மற்றொரு கும்பல் வந்தது. இவர்களும் மோட்டார் பைக்கில் வந்த 2 பேரும் சேர்ந்து பூவராகவனை வழிமறித்து காரில் கடத்தி சென்றனர்.

சிறிது நேரத்திற்குப்பின் பூவராகவனின் மகன் அரிஷ் கேசவை தொடர்பு கொண்ட கும்பல் உன் தந்தையை கடத்தி விட்டோம். ஒரு கோடி ரூபாய் பணம் தந்தால்தான் விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். அதற்கு அரிஷ் கேசவ் தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார். இதனால் பூவராகவனை அந்த கும்பல் தாக்கியது. இதையடுத்து அரிஷ் கேசவ் வங்கி லாக்கரில் இருந்த 315 கிராம் தங்கக் கட்டியை எடுத்துக் கொண்டு குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கு சென்று கொடுத்து, தனது தந்தையை மீட்டு வந்தார்.

பின்னர் இதுகுறித்து பூவராகவன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் எண், சிக்னல் மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில், பூவராகவனை காரில் கடத்தியது திருப்பாதிரிப்புலியூர் தானம் நகரைச் சேர்ந்த வேலன் மகன் அஜித் (24), பனங்காட்டு காலனி சுனாமி நகர் கிருஷ்ணராஜ் மகன் சதீஷ்குமார் (40), நாணமேடு மேற்கு தெருவை சேர்ந்த தங்கராசு மகன் வினோத்ராஜ் (34), வசந்தராயன் பாளையம் சலங்கை நகர் வெங்கடேசன் மனைவி ரேணுகா (40), ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதில் கடத்தப்பட்ட பூவராகவனின் மகன் அரிஷ்கேசவும் அஜித்தும் நண்பர்கள். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, அரிஷ் கேசவ் வீட்டுக்கு அஜித் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனால், பூவராகவன் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. மேலும் பூவரராகவன் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் தங்க கட்டி வாங்கி, வங்கி லாக்கரில் வைத்திருப்பதும் அஜித்துக்கு தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த பணத்தைப் பறிக்க அஜித் திட்டமிட்டார். அதன்படி பூவராகவனை கடத்தி பணத்தை பறிக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்துள்ளார். ஆனால் இது எதுவும் தெரியாததுபோல் தனது நண்பரான அரிஷ் கேசவிற்கு உதவுவது போல் தங்க கட்டிகளை வங்கி லாக்கரிலிருந்து எடுத்தபோதும், கடத்தல் காரர்களிடம் கொடுத்தபோதும் கூடவே, இருந்துள்ளார். மேலும் அவ்வப்போதே நடக்கும் விபரங்களை கடத்தல்காரர்களான தனது கூட்டாளிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார், என்ற விவரம் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அஜித், சதீஷ்குமார் வினோத்ராஜ், ரேணுகா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், கத்தி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார், தங்க கட்டி உள்ளிட்டவற்றை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடித்த டிஎஸ்பி ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன், எஸ்ஐ கார்த்திக் கணேஷ், எஸ்எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசாரை பாராட்டினார்.