புதுச்சேரி, நவ. 7: புதுச்சேரி வடிசாராய ஆலை பணி நீக்க ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த ஆரியபாளையத்தில் அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த 2009ம் ஆண்டில் 53 ஊழியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 14 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2023ல் 53 ஊழியர்களையும் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அரசு சுமூக தீர்வு கண்டு, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான சாத்திய கூறுகள் இருந்தால் 53 ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டியும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் ஆலை வளாகத்தில் பணி நீக்க ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4வது நாளான நேற்று, விசிக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பணிநீக்க ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி அரசு மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து, பணி நீக்க ஊழியர்கள் சாராய ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

