செஞ்சி, அக். 7: செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிவட்டம் பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான 25 ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று பிறகு நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை (நேற்று) வந்து பார்த்தபோது ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதில் நான்கு ஆடுகள் உயிரிழந்த நிலையில், 10 ஆடுகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டது. தகவலறிந்து வந்த செஞ்சி வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் மர்ம விலங்குகளின் கால் தடங்களை சேகரித்து விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். கடந்த 3 மாதங்களில் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு, மணியம்பட்டு, ரெட்டனை, அகலூர், ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்குகள் 10வது முறையாக கடித்ததில், இதுவரை 5 கன்றுக்குட்டிகள் மற்றும் 105 ஆடுகள் வரை உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் மர்ம விலங்குகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.