தியாகதுருகம், அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கிரிவலம் செல்வதற்காக தனியார் வேனில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் வளைத்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையான போலீசார், சாலையில் குறுக்கே கவிழ்ந்த கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் (31) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement