பாகூர், டிச. 6: கடலூர் மாவட்டம் புதுக்கடையை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-வளர்மதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்து விட்ட நிலையில், வளர்மதியால் தனது 3 பிள்ளைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் நலக்குழு உதவியின் மூலமாக, 3 பிள்ளைகளையும் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் குழந்தைகளை இல்லத்தில் சேர்த்து விட்டார். அங்கு 3 பேரும் தங்கி, பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 2வது மகன் தொல்காப்பியன் (14), பாகூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மாலை 4.30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் தொல்காப்பியனை அழைத்து வர பள்ளிக்கு சென்றார்.
ஆனால் தொல்காப்பியன் பள்ளியில் இல்லை. உடனே இதுபற்றி தனியார் பாதுகாப்பு இல்லத்தின் நிர்வாகி கோகுலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர், பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, மாணவன் தொல்காப்பியன் பள்ளி முடிந்து 4.30 மணிக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், மாணவனின் சொந்த ஊரான புதுக்கடை உள்ளிட்ட அவரது நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.

