காட்டுமன்னார்கோவில், நவ. 5: காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் உள்ள ரோட்டு தெரு, சாவடி தெரு, வெளார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பொது இணைப்பில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த நேரமே வினியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் நேற்று மாலை காலி குடங்களுடன் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement
