முஷ்ணம், டிச. 2: முஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியை சேர்ந்தவர் பழனி. மெக்கானிக். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு திருமணம் நடந்து 6 ஆண்டு ஆகிறது. சாய் லோகேஷ் (4), சாய்ரக்க்ஷன் என்கிற ஒன்றரை வயது குழந்தை உள்ளனர். பழனி கடந்த ஞாயிற்று கிழமை சபரிமலைக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை தீபா அருகில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் சென்று விட்டு வீடு திரும்பினார். இதையடுத்து வீட்டில் குழந்ைதகளை விட்டுவிட்டு உள்ளே சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது 2 குழந்தைகளையும் காணவில்லை.அதிர்ச்சியடைந்த தீபா அப்பகுதியில் உள்ள புத்தேரி வடிகால் வாய்க்காலில் சென்று தேடியுள்ளார். இதில் சாய் லோகேஷ் மட்டும் இருந்துள்ளார். சாய்ரக்க்ஷனை காணவில்லை. அவர் வாய்க்காலில் தவறி விழுந்ததாக கூறி முஷ்ணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி தேடியபோது அப்பகுதியில் உள்ள புதரில் சாய்ரக்க்ஷன் கிடந்துள்ளான்.
பின்னர் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தீபா சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வடிகால் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

