பிறந்த தேதியை திருத்தி பணி நீட்டிப்பு உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுச்சேரி, ஜூலை 1: பணி பதிவேட்டில் பிறந்ததேதியை சட்டவிரோதமாக திருத்திய அரசு உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி புகார் அளித்தார். அதில், புதுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய நாராயணசாமி அரசாங்க பதிவேட்டின்படி அவரின் பிறந்த தேதி 1953ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி எனவும், பிறகு தவறான தகவல்கள் அளித்து, திண்டிவனம் நீதித்துறை நடுவர் -II மூலமாக பெறப்பட்ட ஒரு உத்தரவின் அடிப்படையில் 1958ம் ஆண்ட ஏப்ரல் மாதம் 8ம் தேதி பிறந்தவர் என்பதுபோல பிறந்த பதிவினை பதிவு செய்ய ஒரு உத்தரவை பெற்றுள்ளார்.
அவர் 2013ம் ஆண்டிலே பணி ஓய்வு பெற வேண்டியவர், பணியில் தொடர வேண்டும் என்ற நேர்மையற்ற நோக்கத்துடன் 2018 வரை தனது பணி ஓய்வு காலத்தையும் தாண்டி அரசு பணியினை தொடர்ந்து செய்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஏறக்குறைய ரூ.41 லட்சத்து 85 ஆயிரத்து 311 நஷ்டத்தை ஏற்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளார். அதன்படி பணிப்பதிவேட்டில், தனது உண்மையான பிறந்த தேதியான 1953ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி என்பதை சட்டவிரோதமாக 1958ம் ஆண்டு என திருத்தம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாராயணசாமி மீது, தவறான தகவல் அளித்தல், பொய் சாட்சியம் அளித்தல், ஏமாற்றும் நோக்கில் பொய்யான ஆவணம் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்டதை உண்மையான உபயோகம் செய்தல், ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து, நேற்று தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். நாராயணசாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், 181 ஐபிசி பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், 193 ஐபிசி பிரிவின் கீழ் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், ஐபிசி 468 பிரிவின் கீழ் 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், ஐபிசி 471 பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேற்கொண்டு 3 மாதம் காலம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்படி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நாராயணசாமி அனுபவிக்க வேண்டும். அரசு தரப்பில், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் லோகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் ஆய்வாளர்கள் சண்முகம், பிரான்சிஸ் டொமினிக், மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர்.