Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாஜ மேலிட பொறுப்பாளர் பேச்சு என்.ஆர்.காங்கிரசார் அதிர்ச்சி

புதுச்சேரி, ஜூலை 1: புதுவையில் பாஜ மேலிடப் பொறுப்பாளர் பேச்சால் என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியில், 16 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கு 9 இடங்களும், அதிமுகவுக்கு 5 இடங்களுக்கும் ஒதுக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது. இதில் என்.ஆர் காங்கிரஸ் 10, பாஜ 6, சுயேட்சைகள் 6, திமுக 6, காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றிப்பெற்றது. என். ஆர் காங்கிரஸ், பாஜ, ஆதரவு சுயேட்சைகள் மூலம் தேஜ கூட்டணி அரசு நடந்து வருகிறது. இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜவில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. பாஜவுக்கு புதிய தலைவர், அமைச்சர் மாற்றம், 3 புதிய எம்எல்ஏக்களை நியமனம் செய்துள்ளது. கடந்த முறை தேஜ கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜ, இந்த முறை கூடுதல் இடங்களை

எதிர்பார்த்துள்ளது.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் வரும் தேர்தலில் பாஜ சரிபாதி 15 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா வெளிப்படையாக தெரிவித்துள்ளது, என். ஆர் காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாஜ புதிய தலைவராக வி.பி ராமலிங்கம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதில் கலந்து கொண்டு பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:

மாணவர்களுக்கு ஆண்டுக்கொரு முறை இறுதி தேர்வு வரும். அரசியல் கட்சிகளுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும். கடந்த முறை முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தோம். இந்த முறை ரேங்கில் முதலிடத்துக்கு வர வேண்டும். இதுக்கு ஒரு லீடர் வேண்டும், அவர்தான் ராமலிங்கம், இது எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது.

கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிப்பெற்றோம். இந்த முறை 12 சீட்டோ அல்லது 15 சீட்டோ எதுவாக இருந்தாலும் 100 சதவீத தேர்ச்சியை புதிய தலைவர் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கட்சிக்காக செல்வகணபதி, நமச்சிவாயம் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக நியமன எம்எல்ஏவாக இருக்கிறீர்கள், ஒரு ஆண்டு மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும் என கேட்டேன். எதுவும் பேசவில்லை. அங்கேயே பேப்பரில் 4 பேரும் ராஜினாமா எழுதி கொடுத்துவிட்டனர். இதுதான் எங்கள் கட்சியின் அழகு. நியமன எம்எல்ஏக்களாக யாரை போடலாம் என யோசித்தபோது, அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியிருந்தது.

கட்சிக்காக உழைத்தவர்களை மேலே உட்கார வைக்க வேண்டும் என்றுதான் முதலியார்பேட்டை செல்வத்தை எம்எல்ஏவாக நியமித்துள்ளோம். நான்கு ஆண்டுகளாக இருந்த ராஜசேகர், தீப்பாய்ந்தான் ஆகியோருக்கும் எம்எல்ஏ கொடுத்துள்ளோம். அமைச்சர் பதவியை ஜான்குமாருக்கு கொடுங்கள் என கேட்டபோது, 5 நிமிடம்தான் ஓகே என சாய். ஜெ. சரவணன் குமார் கூறினார். எந்தெந்த கோயிலுக்கு போய் அமைச்சராக வேண்டும் என்று அனுமதி கேட்டேனோ? ராஜினாமா செய்யவும் அங்கே சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொன்னார். புதுச்சேரியில் பாஜ எங்கே இருக்கிறது என 2020ம் ஆண்டு காங்கிரஸ்காரர்கள் கேட்டனர். அவர்களை இப்போது தேடும் நிலையில், எங்களை உயர்த்தி கொண்டு வந்தது நீங்கள். நான் உங்கள் கூடவே இருப்பேன், 2026 தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.