Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடனை திருப்பி தராத முதியவரை காரில் கடத்தி கைவிரல் துண்டிப்பு

கடலூர், ஜூலை 1: கடலூரில் கடனை திருப்பி தராததால் முதியவரை காரில் கடத்தி கைவிரலை துண்டித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் (71). இவரது மகன் மணிகண்டன். இருவரும் சிதம்பரத்தில் பல சரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜன் தனது வியாபாரத்தை மேம்படுத்த சிதம்பரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ரூ.15 லட்சத்துக்கு வட்டி சேர்த்து ரூ.67 லட்சம் கேட்டுள்ளார். ஆனால் நடராஜன் பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் மயிலாடுதுறைக்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி நேற்று தனது ஆதரவாளர்களை அனுப்பி நடராஜனை காரில் கடத்தியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது நடராஜனை கடத்தியவர்கள் காரில் அவரை கடலூர் நோக்கி கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த காரை மடக்கிப் பிடிக்க போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று மதியம் குடிகாடு பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து, அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர்கள் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (65), பாண்டியன் (55), பன்னீர்செல்வம் (70), மரியசெல்வராஜ் (64), தேவநாதன் (60) என தெரியவந்தது. மேலும் நடராஜன் கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் இருந்தார். இதையடுத்து நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து முதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் முதுநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.