Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மங்கலம்பேட்டை அருகே பரபரப்பு; என்எல்சி அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்த விவசாயிகள், போலீசார் பேச்சுவார்த்தை

மங்கலம்பேட்டை, ஜூலை 31: மங்கலம்பேட்டை அருகே என்எல்சி அதிகாரிகள் வாகனத்தை விவசாயிகள் சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு கம்மாபுரம் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம், கோபாலபுரம், மணல்மேடு உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்த 2008-09 காலக்கட்டங்களில் ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ரூ.17 லட்சம் வரை இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை, வேலைக்கு பதிலாக நிரந்தர வைப்புத்தொகை வழங்கப்படுவதால் அதேபோல் தங்களுக்கும் வழங்க கோரி கம்மாபுரம் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் நிலங்களுக்கு வாழ்வாதார தொகையாக வழங்கப்பட்ட ரூ.ஒரு லட்சத்து 9 ஆயிரம் என்பது ஏற்க முடியாது எனவும், பாரபட்சமின்றி ரூ.17 லட்சம் வழங்க வேண்டும், 2000 முதல் 2013 வரை என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் என்எல்சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உரிய இழப்பீடு தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், நிலங்களை கையகப்படுத்தி கம்பி வேலி அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று கம்மாபுரம் பகுதி விவசாய நிலங்களில் கம்பிவேலி போட என்எல்சி அதிகாரிகள் ஊழியர்களை ஜீப்பில் அழைத்து வந்தனர். இதையறிந்த கம்மாபுரம், சிறுவறுப்பூர் கிராம விவசாயிகள் என்எல்சி வாகனத்தை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கம்மாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் வாகனத்தை விடுவித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.