பயணி கூறிய இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் பொதுமேலாளர், கண்டக்டர், டிரைவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர், ஜூலை 30: பயணி கூறிய இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் பொதுமேலாளர், கண்டக்டர், டிரைவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் மகன் வக்கீல் பாலமுருகன் (24). இவர் கடந்தாண்டு மார்ச் 18ம் தேதி கடலூர்- சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். அப்போது, பாலமுருகன் பெரியகுமட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று கண்டக்டரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் பெரியகுமட்டியில் பேருந்து நிற்காது, வேண்டுமென்றால் கொத்தட்டை அல்லது பி.முட்லூரில் இறங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.இதனால் வேறு வழியின்றி பாலமுருகன் பி.முட்லூரில் இறங்கி சென்றுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பாலமுருகன், இதுகுறித்து கடலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பெரியகுமட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டும், அங்கு பேருந்துகள் நின்று செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நானும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த வழக்கை மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கடலூர் மண்டல பொது மேலாளர், அரசு பேருந்து கண்டக்டர், டிரைவர் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகனுக்கு மன உளைச்சல், வழக்கு செலவு சேர்த்து ரூ.30 ஆயிரம் அபராதமாக வழங்க உத்தரவிட்டனர்.
மேலும் சரியான வழித்தட எண்ணுடன், உரிய கால அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பயணிகள் பார்க்கும்படி பேருந்து நிற்கும் இடம் பற்றி அறிவிப்பை பேருந்தில் அச்சிட வேண்டும். இடைநில்லா பேருந்து (பாயிண்ட் டூ பாயிண்ட்) தவிர மற்ற அரசு பேருந்துகள் அனைத்தும் பெரியகுமட்டியில் நின்று செல்ல வேண்டும். பேருந்துகளின் கால அட்டவணையை பெரியகுமட்டி பேருந்து நிறுத்தத்தில் இருபுறமும் வைக்க வேண்டும் போன்ற வழிகாட்டி நெறிமுறைகளை 4 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.