உளுந்தூர்பேட்டை, அக். 29: உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ராடால் அடித்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவருடைய மகன் அந்தோணி ஆரோக்கியஜோ (19). 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்றவரை காணவில்லை என பெற்றோர் தேடி பார்த்தபோது இதே கிராமத்தில் உள்ள ஆர்சி பள்ளி மற்றும் சர்ச் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் தாய் கிரேசி மேரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஆரோக்கிய ஜோ கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்தோணி ஆரோக்கிய ஜோக்கும், இதே கிராமத்தில் வசித்து வரும் 2 நண்பர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அந்தோணி ஆரோக்கிய ஜோவை அவர்கள் அழைத்துச் சென்று இரும்பு ராடால் அடித்து படுகொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தால் மேலும் கொலைக்கான காரணம் தெரியும் என்பதால் போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
