மதில் சுவர் விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
வடலூர், ஆக. 27: கடலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடந்த 23ம் தேதி மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு பணி புரிந்து வந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த அன்பு மனைவி இளமதி (35), தேவர் மனைவி இந்திரா (32) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததுடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இளமதி, இந்திரா குடும்ப வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் காசோலையை வழங்கினார். மாவட்ட கல்வி குழுத் தலைவர் சிவக்குமார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.