மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி மோசடி
புதுச்சேரி, நவ. 13: மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி அவரது மகன் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் எலக்ட்ரிக் கம்பெனி இயங்கி வருகிறது. இதனுடைய மேலாண் இயக்குநர் பிரசன்னா பூட்டோரியா (60) என்பவர் டெல்லி நொய்டாவில் புதிதாக கம்பெனி தொடங்க ஒரு இடம் வாங்குவதற்காக அவரது மகன் ரங்கித் பூட்டோரியாவிடம் ரூ.4 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பிறகு ரங்கித் பூட்டோரியா ஒரு இடத்தை வாங்கி அதனை கம்பெனி பெயரில் பதிவு செய்யாமல் அவருடைய பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் பிரசன்னா பூட்டோரியாவுக்கு தெரியவந்தவுடன் கம்பெனிக்கு இடம் வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி விட்டதாக தனது மகன் ரங்கித் பூட்டோரியா மீது சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
