புதுச்சேரி, அக். 8: நீட் சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான 2வது சுற்று மாணவர் சேர்க்கைக்கு பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 10 இடங்கள், கிறிஸ்துவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 56 இடங்கள், தெலுங்கு சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 114 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 7 இடங்கள், என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 60 இடங்கள் என மொத்தமாக 247 இடங்கள் காலியாக உள்ளன. பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 33 இடங்கள், தெலுங்கு சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 50 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 5 இடங்களும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 4 இடங்களும் என மொத்தமாக 96 இடங்கள் உள்ளன. இதேபோல், பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்) படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 18 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 10 இடங்களும், பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) படிப்பில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 3 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை 3வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தி வருகிற 11ம் தேதிக்குள் பாட விருப்பங்களை தேர்வு செய்யுமாறு சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் சார்ந்த இளநிலை படிப்புக்கான 2வது சுற்று மாணவர் சேர்க்கை பட்டியல் மற்றும் காலியிடங்கள் விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று மற்றும் 2வது சுற்றில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், 3வது சுற்றில் எந்த வரம்பும் இல்லாமல் பங்கேற்கலாம். 3வது சுற்று கலந்தாய்வுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்பில் உள்ள அரசு, நிர்வாகம் மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் பிவிஎஸ்சி படிப்பில் சுயநிதி மற்றும் என்ஆர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 11ம் தேதி மாலை 5 மணி வரை சென்டாக்கில் பதிவு செய்ய அனைத்து மாணவர்களும் பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
சென்டாக்கில் முதல் மற்றும் 2வது சுற்று கலந்தாய்வு மூலம் சீட் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், 2வது சுற்றுக்கான பதிவு கட்டணத்தை பறிமுதல் செய்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட இடத்தை திரும்ப பெற விரும்பினால் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் டேஷ்போர்டு மூலம் தங்கள் ராஜினாமா கோரிக்கை கடித்தை சமர்ப்பிக்கலாம். 3வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவு கட்டணமாக கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும். பின்னர், பாட விருப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி மாணவர்கள் ரூ.25 ஆயிரமும், மற்ற மாணவர்கள் ரூ.1 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2 லட்சமும், பிஏஎம்எஸ் படிப்புக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி மாணவர்கள் ரூ.5 ஆயிரமும், மற்ற மாணவர்கள் ரூ.10 ஆயிரமும் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிடவும். அல்லது மாணவர்கள் தங்களது டேஷ்போர்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் கேள்விகளை சமர்ப்பிக்கலாம். அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.