Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2023-24ல் 10 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை 29: புதுச்சேரி பள்ளிகளில் மூன்று முக்கிய நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான மனித வளங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சியடைய செய்யும் உன்னத நோக்கமாக முன் வைக்கப்படுகிறது. அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் மூன்று முக்கியமான முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நமது சுற்றுச்சூழலை வலுப்படுத்தவும், மாணவர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின்படி 2030ம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாத 100 மாணவர் சேர்க்கைக்கு திட்டமிடப்பட்டு பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு கொண்டுவர வேண்டும். இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்வி பயில புதுச்சேரி அரசு எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் 2023-24ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, புதுச்சேரி மாநிலம் 10 ஆயிரத்து 54 குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியதாக பதிவு செய்துள்ளது. அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு தீவிரமான முன்னெடுப்பு, பிரசாரத்துக்கு தங்களின் தலையீட்டை வேண்டுகிறேன். பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப்- 2 நீரிழிவு நோய் ஏற்படுவது குறித்து மிகுந்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு காரணமாக, குழந்தைகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் குறைந்துள்ளது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான பள்ளி குழந்தைகளின் தொடர்பைக் குறைக்கவும், ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தழுவவும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வது அவசியம் என நான் நம்புகிறேன். 2025ம் ஆண்டு ஜூலை 15ம் தேதிக்குள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் பள்ளிகளில் சுகர்போர்டு வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு ஜங்க் புட், குளிர் பானங்கள் ஆகியவை அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

அதேபோல் ஊட்டச்சத்து, உடற்கல்வி செயல்பாடுகளை மேம்படுத்துதல் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறை, அதிகரித்து வரும் நீரிழிவு நோய்களை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கும். இறுதியாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உள்ளடக்கிய குடிமக்கள் தங்கள் சொந்த தாய், தாய் நாட்டின் மீது அன்பு, மரியாதையின் அடையாளமாக ஒரு மரத்தை நட ஊக்குவிக்கும், தாயின் பெயரில் மரம் நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எனவே தேசிய, மாநில உள்ளூர் மட்டங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் இந்த கூட்டு முயற்சி அவசியமாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.