Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

தூத்துக்குடி, ஜூன் 28: சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28,212 வழங்க வேண்டுமென பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மரிய விக்டோரியாள் ராணி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றிருந்தார். இதற்கான தவணையை செலுத்தும்போது ரெக்கவரி கட்டணம் சேர்த்துக் கட்டினால் தான் ரசீது கொடுக்கப்படும் என கூறியிருந்தனர்.

ஆனால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி இதுபோன்ற சரத்துகள் இல்லையென விக்டோரியா கூறியும் இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இருமுறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியுள்ளார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து ரெக்கவரி கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ.8,212, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.28,212ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லை என்றால் அத்தொகையை செலுத்தும் வரை ஆண்டு ஒன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.