Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருத்தாசலம் அருகே பரபரப்பு; அமிலம் ஏற்றி சென்ற லாரி தடுப்பு கட்டையில் மோதி விபத்து

* போக்குவரத்து மாற்றம்

* எஸ்பி ராஜாராம் விசாரணை

விருத்தாசலம், ஜூலை 31: விருத்தாசலம் அருகே அமிலம் ஏற்றி வந்த லாரி தடுப்பு கட்டையில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம்-சேலம் நெடுஞ்சாலையில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்கம் மற்றும் டேங்கர் இருந்த பகுதி சேதமடைந்ததால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுனர் ராயதுரை சென்றுவிட்டார். காலை 10 மணி ஆகியும் விபத்தில் சிக்கிய லாரி மீட்கப்படாமல் இருந்ததால், டேங்கரில் இருந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வெளியே வர தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுக்க நெடி ஏறி பொதுமக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்தனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து அமிலத்தின் நெடியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அதனையும் மீறி அப்பகுதி முழுக்க அமில வாடை வீசியதால், சாலையின் இரு புறங்களிலும் பேரிக்கார்டுகள் அமைத்து போக்குவரத்தை மாற்றம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தனர். இதனால் சேலம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக விருத்தாசலத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதேபோல் விருத்தாசலம் நகரத்திலிருந்து செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக செல்ல வழிவகை செய்தனர்.இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்தில் இருந்து மற்றொரு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து மற்றொரு லாரியில் அமிலத்தை ஏற்றினர். இதனால் பரபரப்பான அப்பகுதி கொஞ்சம் அடங்கியது.

கடலூர் எஸ்பி ராஜாராம், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்யராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அருகில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கோவில் பூட்டப்பட்டது. மேலும் கோயிலுக்குள் இருந்த 9 மான்கள் அமில வாடையால் அவதிப்பட்டதால் அதனை பாதுகாக்கும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.