நாகர்கோவில், ஜூலை 23: குமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார். வார்டுகளின் தரை மற்றும் சுவர் பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கேட்டுக்கொண்டார். வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்ற பிரத்தியேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.