Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன பத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

மேட்டுப்பாளையம், ஜூலை 28: வன பத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதேபோல் அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த காலகட்டங்களில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டின் 32-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த ஜூலை 22ம் தேதி நெல்லித்துறை கிராம மக்களின் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகமும், பல்வேறு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.

விழாவின் மூன்றாம் நாளில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நான்காம் நாள் லட்சார்ச்சனையும், ஐந்தாம் நாள் கிராம சாந்தி, முனியப்பன், பக்காசுரன் வழிபாடும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று சிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்க்கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் தேக்கம்பட்டியில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு தேக்கம்பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோருடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வனபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து சிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியவாறு திருக்கோவிலை வலம் வந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சரியாக 11.45 மணியளவில் சிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடி மங்கள இசை வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று மாலை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் ஜூலை 29 ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.