கோவை, ஜூலை 25: கோவை விஜிஎம் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் திறந்து வைத்தார். இதில் மாடுலார் ஆபரேஷன் தியேட்டர்கள், எச்இபிஏ வடிகட்டும் காற்றோட்டங்கள், சிறப்பு ஐசியு மற்றும் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள உறுப்பு கொடையாளர் மற்றும் உயிரிழந்த உறுப்பு கொடையாளர் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கும் திறன் உள்ளது. இவ்விழாவில், டாக்டர் அருண் சன்யால் பேசுகையில், “இந்தியாவில் கல்லீரல் நோய்கள் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. விஜிஎம் மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன,” என்றார்.
விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் பேசுகையில், “இது வெறும் அறுவை சிகிச்சை கூடம் அல்ல. இது ஒரு தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட தளம். குறைந்த செலவில் பராமரிப்பு, ஆய்வு, பயிற்சி மற்றும் ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் போன்ற பணிகள் செய்யப்படும்’’ என்றார். இதில், எண்டோஸ்கோபி துறையின் இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா மற்றும் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.