மேட்டுப்பாளையம், ஆக.2: மேட்டுப்பாளையம் பால்குட பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 17 வது ஆண்டு பால்குட ஊர்வலம் மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து நேற்று துவங்கியது. ஊர்வலத்தை விழா குழு தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், துணை தலைவர் பத்ம முருகையன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அம்மன் மற்றும் கருப்பசாமி வேடமணிந்து, பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடியவாறு, மேள, தாளங்கள் தாரை,தப்பட்டை முழங்க பாதயாத்திரையாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து, உலக நலன் வேண்டி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.