கோவை, ஆக. 3: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பொருட்களை சாலைகளில் வைத்து பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. கோவை நகரில் சில இடங்களில் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் ஜல்லி, மணல், கம்பி உள்ளிட்ட பொருட்களை சாலையில் வைத்து பணி மேற்கொள்வதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு சில சமயங்களில் விபத்து ஏற்படுவதாகவும் புகார் எழுகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்போது கட்டுமான பொருட்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. மீறினால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கட்டுமான பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.