காரமடை, ஜூலை 25: காரமடை அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். காரமடை வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் புவன் பிராங்க்ளின் (23). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (28). கட்டிட தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, பிராங்க்ளினுக்கு தெரிந்த இளம்பெண் குறித்து ரஞ்சித் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிராங்க்ளின் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை குத்தியுள்ளார். இதில் ரஞ்சித்துக்கு இடது பக்க மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ரஞ்சித்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று புவன் பிராங்க்ளினை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.