கோவை, ஆக. 4: கோவையில் விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. மாவட்ட அளவில் கடந்த சில மாதங்களாக பட்டியலில் பெயர் சேர்க்க மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
பெயர் முகவரி திருத்தம் செய்ய 22,788 பேர், நீக்கம் செய்ய 9582 பேர் மனு அளித்திருந்தனர். மாவட்ட அளவில் 31.85 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்கம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இரு வாரங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இறந்த வாக்காளர்கள் பலர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டாகவே பெயர் நீக்கம் மந்தமாக நடப்பதாக தெரிகிறது.
நீக்கப்படாத இறந்த வாக்காளர்களால், வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க வட்டார அளவிலான தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும். முன்னதாக சுகாதார துறையிடம் இருந்து இருந்து இறப்பு சான்று பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்கம் செய்ய வேண்டும்.
பெயர் நீக்கத்தை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் பெயர் நீக்கம் செய்வது அதிகமாக இருக்கும். மாவட்ட அளவில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டால் ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியிருக்கும். இதற்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதில் இறந்த வாக்காளர்களை நீக்க தேவையான முயற்சி எடுக்கப்படும். இதன் மூலமாக தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பட்டியலில் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.